ஈரோடு மாவட்டத்தில் தற்செயல் தேர்தல்: 144 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 144 வாக்குச்சாவடிகளில் தற்செயல் தேர்தல் அமைதியாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் 144 வாக்குச்சாவடிகளில் தற்செயல் தேர்தல் அமைதியாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் நேற்றும் நடத்தப்பட்டன. அந்த தேர்தலுடன், மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கான தற்செயல் தேர்தல்களும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி 1, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி-2, ஊராட்சி தலைவர் பதவி -4, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி-20 என மொத்தம் 27 காலி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
144 வாக்குச்சாவடிகள்
இதில் 7 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றனர். எனவே 20 பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. 65 பேர் போட்டியில் இருந்தனர். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 144 வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்து இருந்தனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 80 ஆயிரத்து 225 வாக்காளர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 5-வது வார்டில் 25 ஆயிரத்து 759 ஆண்களும், 25 ஆயிரத்து 697 பெண்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தனர். ஈரோடு ஊராட்சி ஒன்றியம் 4-வது வார்டில் 3 ஆயிரத்து 818 ஆண்கள், 3 ஆயிரத்து 987 பெண்கள் என 7 ஆயிரத்து 805 பேரும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டில் 2 ஆயிரத்து 561 ஆண்கள், 2 ஆயிரத்து 693 பெண்கள் என 5 ஆயிரத்து 254 பேரும் சேர்த்து 2 ஒன்றியங்களிலும் மொத்தம் 13 ஆயிரத்து 59 பேர் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமைதியாக நடந்தது
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்காளர்கள் ஒவ்வொருவர் பெயரையும் கூறி அழைத்து வாக்காளர் அட்டைகளை சரிபார்த்தனர். வாக்காளர்கள் முகக்கவசம் அணிவது, சானிடைசர் போடுவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. கையுறைகளும் வழங்கப்பட்டன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டுகளை வாக்காளர்கள் அதிகாரிகளிடம் பெற்று முத்திரை பதித்து உரிய பெட்டிகளில் போட்டனர். தொடக்கம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களித்து பழகி இருந்த பொதுமக்களுக்கு, ஓட்டுச்சீட்டு முறையில் முத்திரை பதித்து ஓட்டுப்போடுவது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் பிற்பகல் 3 மணிக்கே 60 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிவரை தேர்தல் நடந்தது. 144 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்தது. முடிவில் 70.22 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
பாதுகாப்பு
மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்கள் மட்டுமின்றி தேர்தல் தொடர்புடைய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
----------------
Related Tags :
Next Story