கிணற்றில் தள்ளி 4 வயது மகள் கொலை; தாயும் தற்கொலை
டி.என்.பாளையத்தில் கிணற்றில் 4 வயது மகளை தள்ளி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டி.என்.பாளையத்தில் கிணற்றில் 4 வயது மகளை தள்ளி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடல்நலக்குறைவு
கோவை மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்தவர் அருள் சிவக்குமார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை சேர்ந்த விஜயபிரியா (45) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியின் மகன் சாம் (10), மகள் துதி (4).
இந்த நிலையில் விஜயபிரியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்தபடியே மருத்துவமனைக்கு சென்று வந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விஜயபிரியா தனது மகன், மகளுடன் டி.என்.பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.
மாயம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் விஜயபிரியா சாப்பிட்டுவிட்டு தனது தாயாரிடம் அறைக்கு தூங்கச் செல்வதாக கூறினார். மறுநாள் காலை உறவினர்கள் எழுந்து பார்த்தபோது விஜயபிரியா இருந்த அறை திறந்து கிடந்தது. உள்ளே சாம் மட்டும் இருந்தான். விஜயபிரியாவையும், துதியையும் காணவில்லை.
இதனால் உறவினர்கள் அவர்களை தேடி பார்த்தனர். அப்போது டி.என்.பாளையம் ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விஜயபிரியா பிணமாக மிதந்தார். ஆனால் துதியை காணவில்லை. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிணங்கள் மீட்பு
உடனே இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி விஜயபிரியாவின் உடலை மீட்டனர். அதைத்தொடர்ந்து துதியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி சுமார் 6 மணி நேரம் கழித்து துதியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் இதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
இதுகுறித்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயபிரியா மகள் துதியை முதலில் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, பின்னர் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story