புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அந்தநேரி வார்டு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய், மதுரை.
===========
உரத்தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் டி.ஏ.பி. உரத்தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு உரம் இட முடியாமல் தவி்க்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், இளையான்குடி.
===========
சேறும், சகதியுமான சாலை (படம்)
மதுரை சித்தம்பட்டி ஹரிஹரன் நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. அதில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள், மதுரை.
===========
தண்ணீர் பிரச்சினை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வில்லிபத்திரி ஊராட்சி சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் 4 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இருப்பினும் அவை எந்த பயன்பாடும் இன்றி வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் சின்னவள்ளிக்குளம்.
============
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் தெருவில் செல்லவே அச்சம் அடைகின்றனர். பொதுமக்களுக்கு ெதால்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
கண்ணன், காரைக்குடி.
=============
சாலையில் பள்ளம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள பெரியார் நகர் 5-வது தெருவில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளத்தின் மீது மரக்கிளையை வைத்துள்ளனர். இப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் தவறி குழிக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜாமணி, காரியாபட்டி.
=============
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நரசிங்கம்பட்டி தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவார்களா?
பொதுமக்கள், நரசிங்கம்பட்டி.
=============
இடியும் நிலையில் மயானம் (படம்)
விருதுநகர் மாவட்டம் பெரியபேராலி பஞ்சாயத்து சின்னபேராலி கிராமத்தில் பொது மயானம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை இங்குதான் எரியூட்டுவது வழக்கம். இந்நிலையில் மயானத்தின் கட்டிடம் ஆங்காங்கே உடைந்துள்ளது. அடிப்பகுதி முழுவதும் இடிந்த நிலையில் உள்ளதால் அது எப்போது விழும் என்ற அச்சத்தில் இங்கு வரும் பொதுமக்கள் உள்ளனர். இதனை இடித்து அகற்றிவிட்டு புதிய மயானம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பசாமி, சின்னபேராலி.
===========
சாலையில் தேங்கும் மழைநீர்
மதுரை 41-வது வார்டு பி.பி,குளம் ரத்தினசாமி நாடார் பஸ் நிலையம் பி.டி.ஆர். மெயின் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைரகண்ணன், பி.பி.குளம்.
===========
Related Tags :
Next Story