16-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தல்:ஆர்வத்துடன் ஓட்டு போட்ட வாக்காளர்கள்
மதுரை மாவட்ட 16-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தல் திருமங்கலத்தில் நேற்று நடந்தது. இதில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
திருமங்கலம்,
மதுரை மாவட்ட 16-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தல் திருமங்கலத்தில் நேற்று நடந்தது. இதில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
இடைத்தேர்தல்
மதுரை மாவட்ட 16-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் அய்யப்பன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து 16-வது வார்டு கவுன்சிலர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 16-வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.
21 பஞ்சாயத்துகளில் 97 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 7 பேர் மற்றும் சுயேச்சை 2 பேர் என மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர்.
ஆர்வத்துடன் ஓட்டு போட்ட வாக்காளர்கள்
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில ்தி.மு.க. வேட்பாளர் ஜெயராஜ் பன்னீர்குண்டு கிராமத்தில் வாக்களித்தார்.அ.தி.மு.க. வேட்பாளர் தமிழழகன் தமது சொந்த ஊரான சாத்தங்குடி அரசுப்பள்ளியில் வாக்களித்தார். தே.மு.தி.க. வேட்பாளர் பழனி மேலஉரப்பனூர் கிராமத்தில் வாக்களித்தார்.
இதேபோல் அ.ம.மு.க. வேட்பாளர் வினோத் அழகுசிறையிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராமதேவர் செட்டிகுளம் கிராமத்திலும் ஓட்டு போட்டனர்.
உரப்பனூர் கிராமத்தில் வாக்களிக்க வந்த வாக்காளர்களை அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வெற்றிலை பாக்கு கொடுத்து வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வசதியாக சரிவு பாதை, சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதால் கிராம மக்கள் 7 மணி முதல் 10 மணிக்குள் வாக்களித்து விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் வேலைக்கு சென்றவர்கள் மாலை 4 மணிக்கு வந்து தொடர்ந்து வாக்களித்தனர். மதியம் 2 மணி நேரம் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள், திருமங்கலத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்தை மதுரை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே செக்காணூரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 3 வாக்கு சாவடி மையங்களில் நடந்த வாக்குப்பதிவு குறித்து கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் ஆய்வு செய்தார்.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேசம்பட்டி ஊராட்சியில் விடுபட்ட 6-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் நடந்தது. இத்தேர்தலில் 3 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். இதேபோல அட்டபட்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக செல்வி, கருங்காலக்குடி ஊராட்சி 12-வது வார்டு உறுப்பினராக பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
------
Related Tags :
Next Story