பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு


பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 9 Oct 2021 9:49 PM GMT (Updated: 9 Oct 2021 9:49 PM GMT)

கோலார் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்த்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் ஆதங்கம் அடைந்திருக்கிறார்கள்.

பெங்களூரு:

ரூ.10-க்கு ஒரு கிலோ

  கோலார் மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் தக்காளிகளை ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். அங்கிருந்து வியாபாரிகள் வாங்கி லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் வெளிமாநிலங்களுக்கும் அங்கிருந்து அனுப்பப்படுகிறது. வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கோலாரில் இருந்து தக்காளி பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  கடந்த மாதம் வரை தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் அவற்றை விவசாயிகள் சாலைகளில் கொட்டி வந்தனர். மேலும் அரசிடம் தங்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால், தக்காளியை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

மழையால் சாகுபடி பாதிப்பு

  இந்த நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதேபோல், கோலார் மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. தக்காளி செடிகள் மழை நீரில் மூழ்கி நாசமாயின. இதனால், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது வழக்கத்தை விட 50 சதவிகித விவசாயிகள் மட்டும் தக்காளியை சாகுபடி செய்தனர். இதனால், கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறையத் தொடங்கியது.

  இதனால், தக்காளி விலை உயரத் தொடங்கியது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் தக்காளியை வாங்க போட்டிப்போட்டு வருகின்றனர். இதேபோல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முகவர்களும் தக்காளியை வாங்க போட்டி போட்டுக் கொண்டு முன்வருவதால் அதன் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை

  பெங்களூருக்கு வரத்து குறையத் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று ஒரே நாளில் கிடு கிடுவென உயர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்ததை விட ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், இல்லத்தரசிகள் ஆதங்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Next Story