கர்நாடகத்துக்கு உடனே நிலக்கரி ஒதுக்கீடு - மத்திய மந்திரியிடம் பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
கர்நாடகத்துக்கு உடனடியாக நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்று மத்திய மந்திரியை நேரில் சந்தித்து பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார்.
பெங்களூரு:
பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்றிருந்தார். பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொண்ட 5-வது சுற்றுப்பயணம் இதுவாகும். அவர் டெல்லியில் மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், மன்சுக் மான்டவியா சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில், நேற்றும் மத்திய மந்திரிகளை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். குறிப்பாக கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை சந்தித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதாவது நாடு முழுவதும் தற்போது நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், கர்நாடகத்திற்கு எப்போதும் வழங்கும் நிலக்கரியை பற்றாக்குறை இன்றி உடனே வழங்கும்படி பிரகலாத் ஜோஷிடம், பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின் போது மின்சாரத்துறை மந்திரி சுனில்குமாரும் உடன் இருந்தார். முன்னதாக மத்திய மந்திரி ஜோதி ராதித்யா சிந்தியாவையும், பசவராஜ் பொம்மை சந்தித்து பேசி ஆலோசனை நடத்தினார்.
பெங்களூருவுக்கு திரும்பினார்
இதையடுத்து, டெல்லியில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவுக்கு திரும்பினார். இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
2 நாட்கள் டெல்லி சுற்றுப்பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பெங்களூருவுக்கு திரும்பி உள்ளேன். மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மான்டவியாவை சந்தித்து பேசி இருந்தேன். ஜி.எஸ்.டி. மற்றும் கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து நிர்மலா சீதாராமனிடம் பேசி இருந்தேன்.
கூடுதல் நிலக்கரிக்கு கோரிக்கை
2-வது நாளாக இன்று (அதாவது நேற்று) கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை சந்தித்து பேசினேன். தற்போது உலகமெங்கும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டிலும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் கர்நாடகத்திற்கு எந்த விதமான பற்றாக்குறையும் இன்றி நிலக்கரி வழங்க வேண்டும் என்று பிரகலாத் ஜோஷியிடம் கோரிக்கை விடுத்தேன்.
அவரும், கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிலக்கரியை எந்த விதமான தட்டுப்பாடும் இல்லாமல் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். மின் உற்பத்தி செய்வதில் எந்த விதமான தடையோ, பிரச்சினையோ ஏற்படாமல் இருக்க வேண்டு்ம் என்றால், நிலக்கரி பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும். இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசிடம் கூடுதல் நிலக்கரி வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜே.பி.நட்டாவை சந்திக்க...
கர்நாடகத்திற்கு 10 முதல் 12 ரேக் நிலக்கரி வழங்க வேண்டும். ஒரு ரேக் என்பது 60 ஆயிரம் டன் நிலக்கரி ஆகும். கர்நாடகத்திற்கு நிலக்கரி வழங்கும் கனிம சுரங்க நிறுவனங்களுடன் உடனடியாக பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு இருக்கிறது. பெங்களூரு பொறுப்பு மந்திரி பதவிக்காக மந்திரிகள் சோமண்ணா, ஆர்.அசோக் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. பெங்களூரு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும்.
இங்கு பொறுப்பு மந்திரியை நியமிக்கும் விவகாரத்தில் அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, அவர்களது கருத்துகளை கேட்டு எந்த விதமான பிரச்சினையும் இன்றி பொறுப்பு மந்திரி நியமிக்கப்படுவார். அனைவரும் பா.ஜனதாவினரே. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லி சென்றிருந்த போது சந்தித்து பேச முடியவில்லை. அவர், வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்ததால், ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச முடியாமல் போனது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
நிலக்கரி தட்டுப்பாடு
ஏற்கனவே கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 8 அலகுகளில் 4 அலகுகளில் மட்டுமே மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது இருப்பு வைக்கப்பட்டு உள்ள நிலக்கரி மூலம் சில நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனல் மின் நிலையத்தில் 45 சதவீத மின்சாரம் கர்நாடகத்தின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. நிலக்கரி தட்டுப்பாட்டால் இங்கு மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.
Related Tags :
Next Story