தமிழகம் முழுவதும் இன்று பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம்


தமிழகம் முழுவதும் இன்று பதிவுத்துறை  குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2021 1:53 AM IST (Updated: 11 Oct 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை,

தமிழகம் முழுவதும் பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

அனைவரும் சமம்

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீர்கெட்டு இருந்த பத்திர பதிவுத்துறை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. பத்திர பதிவுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று சேவை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மக்கள் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த மேடைகள் எல்லாம் அகற்றப்பட்டு மக்களும், அதிகாரிகளும் ஒரு சேர அமருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மிக முக்கியமாக போலி பத்திர பதிவுகள், முறைகேடுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பத்திர பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் சேவைகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஏற்கனவே குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

திருமண பதிவுகள்

இந்த நிலையில் தற்போது அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் துணை பதிவுத்துறை அலுவலகங்களில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி தமிழகத்தில் உள்ள 50 பதிவாளர் அலுவலகம் மற்றும் 9 துணை பதிவுத் துறை தலைவர் அலுவலகங்களில் பதிவுத்துறை குறைத்தீர்க்கும் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும். இந்த கூட்டம் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் பத்திர ஆவணங்கள் பெறுவதில் உள்ள சிக்கல், வில்லங்க சான்றிதழில் திருத்தம், முறைகேடு பதிவுகள், திருமண பதிவுகள், சேவை குறைபாடுகள் தொடர்பான புகார்கள் உள்ளிட்டவை குறித்து மனு அளிக்கலாம். இதில் விசாரணை இல்லாத புகார்கள் 2 நாளில் தீர்க்கப்படும். விசாரணை மீதான புகார்கள் மீது விசாரணை நடத்தி உடனடியாக புகார்கள் தீர்க்கப்படும்.
மதுரையில் இந்த கூட்டம் மகால் மற்றும் ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்தில் நடக்கிறது. அதில் ஒத்தக்கடையில் நடக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறேன். எனவே பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பத்திரப்பதிவு தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story