ஈரோட்டில் காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம்
ஈரோட்டில் காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஈரோடு
ஈரோட்டில் காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
காய்கறிகள் விலை உயர்வு
புரட்டாசி மாதத்தையொட்டி தற்போது பலர் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறி உள்ளனர். இதன் காரணமாக காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைந்து காய்கறிகளின் விலை உயர தொடங்கி உள்ளது. கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை இந்த வாரம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள்.
தக்காளி ஒரு கிலோ ரூ.70
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்பனையான கத்திரிக்காய் நேற்று ரூ.10 விலை அதிகரித்து ரூ.50-க்கு விற்பனையானது. ரூ.25-க்கு விற்பனையான தக்காளி கிடுகிடுவென விலை உயர்ந்து நேற்று ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது.
இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
புடலங்காய் -ரூ.40, பீர்க்கங்காய் -ரூ.50, முருங்கைக்காய் -ரூ.100, மிளகாய் - ரூ.30, இஞ்சி- ரூ.60, கேரட் - ரூ.50, பீன்ஸ் - ரூ.70, பீட்ரூட்- ரூ.25, முட்டைகோஸ் - ரூ.20, அவரைக்காய் - ரூ.40, குடைமிளகாய் - ரூ.70, கோவைக்காய் - ரூ.40, சின்ன வெங்காயம் -ரூ.40, பெரிய வெங்காயம் -ரூ.50. காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
வரத்து குறைவு
இதுகுறித்து நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தர்மபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து ஈரோட்டிற்கு தினமும் 5 ஆயிரம் பெட்டி தக்காளி வந்தது. ஆனால் தற்போது 1,000 பெட்டிக்கும் குறைவாகவே தக்காளி வருகிறது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் தக்காளி விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதேபோல் தாளவாடி, சத்தியமங்கலம், கோபி பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது. கடந்த வாரம் 4 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story