ஈரோடு மாவட்டத்தில் 993 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்- 71,960 பேருக்கு செலுத்தப்பட்டது


ஈரோடு மாவட்டத்தில் 993 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்- 71,960 பேருக்கு செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 10 Oct 2021 9:40 PM GMT (Updated: 10 Oct 2021 9:40 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 5-வது கட்டமாக 993 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் 71 ஆயிரத்து 960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சிறப்பு தடுப்பூச

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 5-வது கட்டமாக 993 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் 71 ஆயிரத்து 960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிறப்பு தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 
மேலும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்ட தடுப்பூசி முகாமில், 97 ஆயிரத்து 198 பேருக்கும், 2-வது கட்ட தடுப்பூசி முகாமில் 48 ஆயிரம் பேருக்கும், 3-வது கட்ட தடுப்பூசி முகாமில் 84 ஆயிரத்து 400 பேருக்கும், 4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 56 ஆயிரத்து 924 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
993 மையங்கள்
இந்த நிலையில், 5-வது கட்ட தடுப்பூசி முகாமானது மாவட்டத்தில் 993 மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளில் தலா ஒரு மையம் மூலமும், 40 நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்களுக்கு காலை முதல் ஆர்வமுடன் சென்று முதல் தவணை மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
ஆணையாளர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி ராஜாஜிபுரம் பகுதியில் நடமாடும் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல், மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த தடுப்பூசி முகாமில் மண்டல அதிகாரிகள், சுகாதாரபணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈரோடு வி.சி.ஆர். வீதியில் நடமாடும் ஆட்டோ மூலம் வீடு வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். 
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த முகாமில் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றவர்களை தன்னார்வலர்கள் அழைத்து வந்து கொரோனா தடுப்பூசி போட்டனர். மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 25 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 71 ஆயிரத்து 960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story