பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 மாடுகள் சாவு- தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு


பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 மாடுகள் சாவு- தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 9:40 PM GMT (Updated: 10 Oct 2021 9:40 PM GMT)

பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 மாடுகள் இறந்தன. தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 மாடுகள் இறந்தன. தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அணை நீர்மட்டம் உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த மழை கொட்டுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் தினமும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்கிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்த தண்ணீர் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு சென்றது. இதன் மூலம் 26.38 அடியாக இருந்த வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 27.66 அடியாக மாறியது. வனப்பகுதி குட்டைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து உள்ளது.
காட்டாற்று வெள்ளம்
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பர்கூர் மலை பகுதியில் மழை தூற தொடங்கியது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. மாலை 6 மணி வரை விடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது.
ஈரெட்டி, தேவர்மலை, வெள்ளிமலை, எலச்சிபாளையம், தாமரைக்கரை, கொங்காடை உள்பட பல்வேறு பகுதிகளில்  பலத்த மழை பெய்தது. மேலும் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மழை பெய்தது. அதனால் எலச்சிபாளையம் நீரோடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
3 மாடுகள் இறந்தன
அப்போது அந்த வழியாக எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈராஜ் (வயது 45) என்பவர் காட்டில் மேய்ச்சலுக்கு விட்ட தனது 10 மாடுகளை வீட்டுக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். வழியில் உள்ள நீரோடையை அவர் மாடுகளுடன் கடக்க முயன்றார். ஆனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மாடுகளால் கடந்து செல்ல முடியவில்லை. இதனால் 3 எருமை மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மற்ற 7 மாடுகள் மட்டும் தண்ணீரை கடந்து சென்றன. அவற்றை ஈராஜ் வீட்டுக்கு ஓட்டி சென்றார். அதன்பின்னர் நீரோடையில் தண்ணீர் குறைந்ததும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 மாடுகளையும் அவர் தேடி சென்று பார்த்தார். அப்போது மாடுகள் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள முட்புதரில் சிக்கி இறந்து கிடந்தன.
தரைப்பாலம் மூழ்கியது
இதேபோல் ஈரெட்டி தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அந்த வழியாக கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வேலைக்கு சென்று திரும்பிய ஈரெட்டி கிராம மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 
சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகே தரைப்பாலத்தில் வெள்ளம் குறைந்தது. அதன்பின்னரே வாகனங்கள் அந்த வழியாக சென்றன. மலைக்கிராம மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘ஒவ்வொரு முறை பலத்த மழை பெய்யும்போதும் ஈரெட்டியில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுவதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே ஈரெட்டியில் உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டி தர அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story