ஈரோடு மாவட்டத்தில் 9 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை


ஈரோடு மாவட்டத்தில் 9 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2021 3:11 AM IST (Updated: 11 Oct 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 9 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 9 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
தற்செயல் தேர்தல்
ஈரோடு மாவட்டத்தில் 20 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 144 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான 39 ஆயிரத்து 755 ஆண் வாக்காளர்களில் 28 ஆயிரத்து 156 பேரும், 40 ஆயிரத்து 466 பெண் வாக்காளர்களில் 28 ஆயிரத்து 177 பேரும், இதர வாக்காளர்கள் 4 பேரில் 2 பேரும் என மொத்தம் 56 ஆயிரத்து 335 பேர் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
அதாவது 70.22 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பெட்டியை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர். பின்னர், வாக்குப்பெட்டிகளை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
9 மையங்கள்
வாக்கு எண்ணிக்கையானது நாளை (செவ்வாய்க்கிழமை) அம்மாபேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளிக்கூடம், பவானி வட்டார அளவிலான சேவை மையம், பெருந்துறை, ஈரோடு, டி.என்.பாளையம், சென்னிமலை, நம்பியூர், அந்தியூர், பவானிசாகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகள் என 9 மையங்களில் நடைபெற உள்ளது.
வாக்குப்பெட்டிகள் நேற்று முன்தினம் இரவே அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. 9 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன் தலா 12 போலீசார் என மொத்தம் 108 போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
600 போலீசார்
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:-
9 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் 108 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (அதாவது நாளை) அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் 100 போலீசாரும், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 500 போலீசாரும் என 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story