குடிசை-வீட்டு வசதி வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை- கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

குடிசை, வீட்டு வசதி வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
கடத்தூர்
குடிசை, வீட்டு வசதி வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
சந்தை வளாகம் கட்டும் பணி
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் தினசரி சந்தை வளாகம் கட்ட ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
இதில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் முருகன், தி.மு.க. நிர்வாகி சிந்து ரவிச்சந்திரன், குள்ளம்பாளையம் செல்வம், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுதீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த ரவி, நகராட்சி ஆணையாளர் பிரேமானந்த், பொறியாளர் சுப்பிரமணி, கோபி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர்
நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோபி நகராட்சிக்கு உள்பட்ட தினசரி மார்க்கெட் கட்டிடம் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திறந்தவெளி கடைகளாக 72 கடைகளும், வெளிப்புறம் 30-ம் என 102 கடைகள் கட்டப்படுகிறது. மேலும் 65 கார்கள், 85 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் அமைக்கப்படுகிறது.
இந்த பணியை 10 மாதம் முதல் ஒரு ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 52 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. திட்டம் நிறைவேற்றப்படும் போது குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் வராது. 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் தரமாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மிகவும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். எனவே இந்த பணிகளை செய்பவர்கள் 100 சதவீதம் தரத்தை கடைபிடிக்க வேண்டும்.
மாதிரி பஸ் நிலையங்கள்
தனியார் துறையில் உள்ள ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதி மூலமாக 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 550 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 1,300 படுக்கை வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை 2 பஸ் நிலையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனிராவுத்தர் குளத்தில் 15 ஏக்கரிலும், சோலார் பகுதியில் 22 ஏக்கரிலும் 2 பஸ் நிலையங்கள் இந்திய அளவில் சிறந்த மாதிரி பஸ் நிலையங்களாக கட்டப்படும்.
ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை ஒரு மாத காலத்தில் அரசு நடத்த உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகள் சீரமைப்பு
வீட்டு வசதி துறையில் 30 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக புறநகரை உருவாக்க இடம் கையகப்படுத்த வேண்டும். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வசதி வாரியத்திடமே உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்த பின்னரே நிலம் கையகப்படுத்தப்படும். ஏற்கனவே கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள கட்டிடங்களில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை 2 ஆண்டுகளில் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவையில் கிட்டத்தட்ட 1,350 வீடுகள் இடியும் தருவாயில் உள்ளது. அதை அரசு பொறுப்பெடுத்து செய்ய வேண்டியது இல்லை என்றாலும் அரசு வீடுகளை சீரமைத்து கொடுக்கும். குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் பிரிப்பு
மாவட்டங்களை பிரிப்பது குறித்த முடிவை முதல்-அமைச்சர் தான் எடுக்க வேண்டும். கோபியை தனி மாவட்டமாக பிரிப்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நிர்வாக வசதிக்காக தான் மாவட்டம் பிரிக்கப்படுகிறது. இதை ஆய்வு செய்து தான் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
Related Tags :
Next Story






