சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை; இன்றும் மழை நீடிக்கும் என ஆய்வு மையம் தகவல்


சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை; இன்றும் மழை நீடிக்கும் என ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2021 12:18 AM GMT (Updated: 11 Oct 2021 12:18 AM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இன்றும் (திங்கட்கிழமை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் அவ்வப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக ஆங்காங்கே மழை பெய்கிறது.

அதன் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால், வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று ஆய்வு மையம் கூறியது.

அதற்கேற்றாற்போல், வட மாவட்டங்களில் இருக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் 3 மணியில் இருந்து மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. சென்னை கிண்டி, ஆலந்தூர், தேனாம்பேட்டை, நங்கநல்லூர், ராயப்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர் உள்பட சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது.

இடியுடன் கனமழை

இதுதவிர சென்னை கோட்டூர்புரம், அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை, பெருங்குடி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்பட சில பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. கனமழை பெய்த போது கருமேகங்கள் சூழ்ந்து இருந்ததால், பல இடங்களில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது.

மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஓரிரு இடங்களில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சில இடங்களில் மழையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை உடனடியாக சரிசெய்தனர்.

இதே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும் (திங்கட்கிழமை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்

ஆந்திர மாநிலம் சித்தூரில் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் உள்ள அம்மபள்ளி அணை நிரம்பியதால், அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த கீழ்கால்பட்டடை, சாமந்த வாடா, நெடியம் சொரக்காய்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதற்கிடையில் அம்மபள்ளி அணியிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 1,500 கன அடி, கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் வந்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் நேற்று மதியம் 34 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம் 2 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் 3 மற்றும் 13-ம் எண் மதகுகள் வழியாக தலா 500 கனஅடி வீதம் 1,000 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வெள்ள அபாயம்

இதனால் கொசஸ்தலை ஆறு பாயும் கரையோர கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, மணலி, மணலிபுதுநகர், சடயாங்குப்பம், எண்ணூர் உள்ளிட்ட 29 கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கொசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள கிராம மக்களுக்கு இது தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.


Next Story