19 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து சீரடிக்கு நேரடி விமான சேவை
மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் இருப்பதால், அங்குள்ள சீரடி விமான நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சீரடிக்கு 2 தனியாா் விமான நிறுவனங்கள் தினமும் 3 விமான சேவைகளை நடத்தி வந்தன. 2020-ம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து கொரோனா முதல் அலை பரவல் அதிகரித்ததால் சென்னை-சீரடி விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. தற்போது தமிழ்நாடு, மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் இருந்து சீரடிக்கு மீண்டும் விமான சேவையை தொடங்க தனியாா் விமான நிறுவனம் முன்வந்தது. சிவில் விமான போக்குவரத்து துறையும் அதற்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் சீரடி விமானத்துக்கு முன்பதிவு தொடங்கியது. சுமார் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து சீரடிக்கு 165 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகள், 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்திய சான்றிதழ்களை பரிசோதித்த பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனா். பின்னர் சீரடியில் இருந்து 35 பயணிகளுடன் அந்த விமானம் மாலை 6 மணிக்கு சென்னைக்கு திரும்பி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story