வாக்காளர்களுக்கு ‘கவரிங்’ நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்; அடகு வைக்க சென்றபோது அம்பலம்
வாக்காளர்களுக்கு ‘கவரிங்’ நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி 1-வது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் வாக்களித்துவிட்டு அந்த நாணயத்தை அடகு வைக்க சென்றபோது, அது பித்தளை என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்பு கொடுத்தால் போலி என தெரிந்துவிடும் என்பதால் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்களை அழைத்து அவர்கள் கைகளில் மறைவாக தங்க நாணயம் என பித்தளையை கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், இதனால் வேறு ஒருவருக்கு வாக்களிக்கும் மனநிலையில் வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களும் குறிப்பிட்ட அந்த கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட்டதாகவும், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊராட்சியில் மறுதேர்தல் நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story