சென்னை போலீசில் 104 போலீஸ் நிலையங்கள்


சென்னை போலீசில் 104 போலீஸ் நிலையங்கள்
x
தினத்தந்தி 11 Oct 2021 5:00 PM IST (Updated: 11 Oct 2021 5:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போலீஸ் 3 ஆக பிரிக்கப்பட்டது. அதன் எல்லைகளும் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை போலீசில் 104 போலீஸ் நிலையங்களும், தாம்பரம் புதிய கமிஷனரகத்தில் 20 போலீஸ் நிலையங்களும், ஆவடி புதிய கமிஷனரகத்தில் 25 போலீஸ் நிலையங்களும் செயல்படும்.

புதிய கமிஷனரகங்கள்

பாரம்பரியம்மிக்க சென்னை போலீஸ் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை போலீசில் இருந்து புதிதாக தாம்பரம் கமிஷனரகம், ஆவடி கமிஷனரகம் என்று புதிதாக 2 கமிஷனரகங்கள் உதயமாகிவிட்டன.

தாம்பரம் கமிஷனரகத்தின் தனி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். ஆவடி கமிஷனரகத்தின் தனி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பதவி ஏற்றுள்ளார். அவர்கள் தற்போது உட்கார்ந்து பணியாற்ற அலுவலகங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி எம்.ரவி பரங்கிமலையில் உள்ள தென்சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் உட்கார்ந்து செயல்படுவார். சந்தீப் ராய் ரத்தோர் அம்பத்தூரில் உள்ள மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் உட்கார்ந்து பணிபுரிவார். இவர்களுக்கு தேவையான அமைச்சுப்பணியாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் எல்லைகள்

அடுத்த கட்டமாக, சென்னை போலீஸ் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை போலீசில் தற்போது மொத்தம் 137 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 104 போலீஸ் நிலையங்கள் மட்டும் சென்னை போலீசோடு தொடர்ந்து இருக்கும். பூக்கடை போலீஸ் நிலையம் தொடங்கி வடசென்னையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் வரையிலும், மேற்கு மண்டலத்தில் புழல், மாதவரம், நொளம்பூர், மதுரவாயல், கோயம்பேடு வரை உள்ளடக்கியதாக இருக்கும்.

தென்சென்னையில் பரங்கிமலை, நந்தம்பாக்கம், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், விமானநிலையம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், அடையாறு, சாஸ்திரிநகர், நீலாங்கரை, திருவான்மியூர், துரைப்பாக்கம், வளசரவாக்கம், ராயலாநகர் ஆகிய போலீஸ் நிலையங்கள் சென்னை போலீசுக்குள் வரும். புழல் ஜெயில், விமான நிலையம், கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், தலைமைச்செயலகம் ஆகிய பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்ற பகுதிகள் சென்னையின் எல்லைக்குள் தொடர்ந்து செயல்பட உள்ளன.

தாம்பரம் கமிஷனரக எல்லை

137 போலீஸ் நிலையங்களில் 104 போக மீதி உள்ள 33 போலீஸ் நிலையங்களில் 13 போலீஸ் நிலையங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 போலீஸ் நிலையங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 போலீஸ் நிலையங்களும் சேர்த்து தாம்பரம் கமிஷனரகத்தில் 20 போலீஸ் நிலையங்கள் சேரும். அதன் விவரம் வருமாறு:-

1.தாம்பரம் 2.குரோம்பேட்டை 3.சேலையூர் 4.சிட்லபாக்கம் 5.பீர்க்கன்கரணை 6.குன்றத்தூர் 7.பல்லாவரம் 8.சங்கர்நகர் 9.பள்ளிக்கரணை 10.பெரும்பாக்கம் 11.செம்மஞ்சேரி 12.கண்ணகிநகர் 13.கானாத்தூர். காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14.சோமங்கலம், 15.மணி மங்கலம்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 16.ஒட்டேரி 17.கூடுவாஞ்சேரி 18.மறைமலைநகர் 19.தாழம்பூர் 20.கேளம்பாக்கம் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த வண்டலூர் மிருகக்காட்சிசாலை தாம்பரம் கமிஷனரகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆவடி கமிஷனரக போலீஸ் நிலையங்கள்

ஆவடி கமிஷனரகத்தின் எல்லைக்குள் சென்னை போலீசில் இருந்து 20 போலீஸ் நிலையங்களும், திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் இருந்து 5 போலீஸ் நிலையங்களும் சேர்த்து மொத்தம் 25 போலீஸ் நிலையங்கள் வரும் என்று தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1.மாதவரம் பால்பண்ணை 2.ரெட்ஹில்ஸ் 3.மணலி 4.சாத்தங்காடு 5.மணலி புதுநகர் 6.எண்ணூர் 7.மாங்காடு 8.பூந்தமல்லி 9.நசரத்பேட்டை 10.முத்தாபுதுப்பேட்டை 11.பட்டாபிராம் 12.அம்பத்தூர் 13.அம்பத்தூர் தொழிற்பேட்டை 14.கொரட்டூர் 15.திருவேற்காடு. 16.எஸ்.ஆர்.எம்.சி. 17.ஆவடி 18.ஆவடி டாங்க் பேக்டரி 19.திருமுல்லைவாயல் 20.திருநின்றவூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21.வெள்ளவேடு 22.செவ்வாய்ப்பேட்டை 23.சோழவரம் 24.மீஞ்சூர் 25.காட்டூர் ஆகிய போலீஸ் நிலையங்கள் அடங்கும்.


Next Story