செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்குள் 70 சதவீத பேருக்கு தடுப்பூசி போட திட்டம்: மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்


செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்குள் 70 சதவீத பேருக்கு தடுப்பூசி போட திட்டம்: மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்
x
தினத்தந்தி 11 Oct 2021 11:47 AM GMT (Updated: 11 Oct 2021 11:47 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்குள் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக முகாமை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

தடுப்பூசி மெகா முகாம்

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 25 ஆயிரத்து 900 ஆக உள்ளது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 11 லட்சத்து 75 ஆயிரத்து 923 பேர் முதல் தவணை தடுப்பூசியும் 4 லட்சத்து 74 ஆயிரத்து 195 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் இதுவரை 4 மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் 5-வது கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

நேற்று மாவட்டத்தில் நடைபெற்ற 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் திரளாக வந்து தடுப்பூசிகளை செலுத்தி சென்றனர்.

இந்த முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசும்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 60 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் 70 சதவீத பொதுமக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 4 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 2½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

நேற்று நடைபெற்ற 5-வது மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடைபெற்றது.

தடுப்பூசி மட்டுமே கொரோனோவை தடுக்கும் ஆயுதமாக உள்ளது. மாவட்ட பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவரது ஆய்வின் போது, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரண, தாம்பரம் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், சுகாதார அலுவலர் மொய்தீன் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர்.


Next Story