சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்
சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்
கோவை
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்திற்கு தற்போதைய சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் கலெக்டரிடம் கடந்த வாரம் முதல் நேரில் மனுக்கள் அளிக்கப்பட்டது என்பதால், இந்த வாரமும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. முன்னதாக காலை 9 மணி முதல் கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். அப்போது முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கினர். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
தற்போதைய சந்தை மதிப்பு
முகாமில் கோவை சின்னியம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சதுர அடிக்கு ரூ.1500 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதே நிலம் சதுர அடிக்கு ரூ.4 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆகிறது. மேலும் அரசு நிர்ணயித்துள்ள தொகையில் புதிதாக வீடு மற்றும் நிலம் வாங்குவது சிரமம் உள்ளது. எனவே அந்த இடத்திற்கு தற்போது உள்ள சந்தை விலையின் அடிப்படையில் இழப்பீடு தொகை மற்றும் மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில், கோவையை அடுத்த சூலூர் மோப்பிரிபாளையம் மற்றும் மதுக்கரை திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள சில நிறுவனங்கள் தேங்காய் தொட்டிகளை எரிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது.
மேலும் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.கால்நடைகளும் பாதிப்பு அடைகின்றன. இந்த நிறுவனங்களை விவசாயம் இல்லாத பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
வீட்டுமனை பட்டா
பாரதிய கிசான் சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனுவில், சூலூர் அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், காங்கேயம்பாளையம், காடம்பாடி உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் சூலூர் விமானப்படைத் தளத்திற்காக, சுமார் 400 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் அந்த இடம் உள்ள சுற்று வட்டார பகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே கையகப்படுத்தப்படும் நிலத்தை சரியாக அடையாளப்படுத்த வேண்டும். இதன் மூலம் அருகில் உள்ள மற்ற நிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குனியமுத்தூர், கரும்புக்கடை பகுதிகளில் உள்ள வீடு இல்லாத பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பொதுமக்கள் சார்பில் மொத்தம் 581 மனுக்கள் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story