அந்தியூர், டி.என்.பாளையம் பகுதிகளில் மின்னல் தாக்கி 2 மாடுகள் சாவு
அந்தியூர், டி.என்.பாளையம் பகுதிகளில் மின்னல் தாக்கி 2 மாடுகள் இறந்தன.
ஈரோடு, அக்.12-
அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 55). விவசாயி. இவர் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் எண்ணமங்கலம், கோவிலூர், விராலிகாட்டூர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ராஜாமணி தன்னுடைய மாடுகளை தொழுவத்தில் கட்டியிருந்தார். அப்போது ஒரு எருமை மாட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் அந்த மாடு அதே இடத்தில் இறந்தது.
இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருடைய வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் வீட்டுக்குள் இருந்த டி.வி. பழுதானது. நாற்காலி உடைந்து சேதமடைந்தது. மேலும் சுவர்களில் விரிசல் உண்டானது. கான்கிரீட்டுகள் பெயர்ந்தன. அதிர்ஷ்ட வசமாக வீட்டுக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இதேபோல் டி.என்.பாளையம் அருகே உள்ள கொழிஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (50). கூலித்தொழிலாளியான இவர் 3 மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அவருடைய பசு மாடு ஒன்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்ெகாண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story