பவானியில் குச்சிப்பை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; தினமும் 2 லட்சம் பைகள் உற்பத்தி பாதிப்பு


பவானியில் குச்சிப்பை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; தினமும் 2 லட்சம் பைகள் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 3:25 AM IST (Updated: 12 Oct 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

பவானியில் குச்சிப்பை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பவானி
பவானியில் குச்சிப்பை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  
குச்சிப்பை தொழிலாளர்கள்
பவானியில் ஜமுக்காள நெசவாளர்களுக்கு முறையான கூலி கிடைக்கவில்லை. இதனால் அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான தொழிலாளர்கள் துணிக்கடைகளில் பயன்படுத்தும் குச்சிப்பைகளை தைக்கும் தொழிலுக்கு மாறினார்கள்.
பவானி பகுதியில் இது ஒரு குடிசை தொழிலாக இல்லத்தரசிகளுக்கு வருவாயை ஈட்டித்தந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டிலேயே மெஷின் வைத்து தைத்து வருகிறார்கள். 
நூல்விலை ஏற்றம்
ஒரு குச்சிப்பைக்கு சைடு பட்டி தைக்க 1 ரூபாய் 50 காசு முதல் 2 ரூபாய் வரையும், சுத்துப்பட்டி பைகள் தைக்க 2 ரூபாய் முதல் 2 ரூபாய் 25 காசு வரையிலும், சிடி சுத்துப்பட்டி பைகள் தைக்க 2 ரூபாய் 25 காசு முதல் 2 ரூபாய் 50 காசு வரையிலும், சுத்துப்பட்டி கிளாப் பைகள் தைக்க 3 ரூபாயும், சாதா மஞ்சள் துணிப்பைகள் தைக்க 30 காசு எனவும் கூலி கொடுக்கப்படுகிறது.
மின்சார கட்டண உயர்வு, தைத்த பைகளை எடுத்துச் செல்லக்கூடிய வாகன செலவு, நரம்பு நூல் விலை ஏற்றம் ஆகியவற்றால் தங்களுக்கு வழங்கக்கூடிய கூலி கட்டுப் படியாகவில்லை என்று தொழிலாளர்கள் கூறி வந்தார்கள். 
கோரிக்கை மனு
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் பவானி வட்டார குச்சிப்பை தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந்தன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏஜெண்டுகள் தரப்பில் மோகன் ஆகியோர் தொழிலாளர்களுடன் சென்று கோரிக்கை மனு கொடுத்தார்கள். 
இதற்கு பை தயாரிக்கும் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் பவானி நடராஜபுரம் பகுதியிலுள்ள ராஜ விநாயகர் கோவிலில் நடைபெற்றது. இதில் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. 
உற்பத்தி பாதிப்பு
அதன்படி நேற்று முதல் குச்சிப்பை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 
இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் குச்சிப்பைகள் தயாரிப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜவுளி கடைகளுக்கு குச்சிப்பைகள் தேவை அதிகம் உள்ளது. இந்த நேரத்தில் குச்சிப்பை தொழிலாளர்களின் போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 
கூலி உயர்வு
இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பவானி தாசில்தார் அலுவலகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பை ஒன்றுக்கு ஒரு ரூபாய் கூலி உயர்வு வழங்குவதாக குச்சிப்பை தயாரிப்பு உரிமையாளர்கள் அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று குச்சிப்பை தொழிலாளர்கள் அறிவித்துள்ளார்கள். 

Next Story