ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 மனுக்கள் பெறப்பட்டன
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 மனுக்கள் பெறப்பட்டன.
ஈரோடு
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 மனுக்கள் பெறப்பட்டன.
வாடகை வாகன ஓட்டுனர்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், அந்தியூர் வாடகை வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
அந்தியூர், வெள்ளித்திருப்பூர், குருவரெட்டியூர், சனிச்சந்தை, சென்னம்பட்டி, அம்மாபேட்டை, குறிச்சி, சிப்காடு, பூதப்பாடி, நல்லூர், அத்தாணி உள்ளிட்ட பகுதியில் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனத்தை வாடகைக்கு இயக்குவதால், வாடகை வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
241 மனுக்கள்
தமிழக இந்து மக்கள் முன்னணி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் விலங்குகள் சித்ரவதைப்படுத்துவதில் இருந்து காக்கும் வகையில் மிருகவதை தடுப்பு குழு அமைக்க வேண்டும். மேலும் சட்ட விதிக்கு மாறாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆடு, மாடு, கோழி, பன்றிகளை கொண்டு செல்வதையும், சித்ரவதை செய்வதையும் தடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலை வசதி, அடிப்படை வசதி, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 241 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முருகேசன், சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் குமரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, சமூக நல அதிகாரி பூங்கோதை உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story