பட்டாசுகள் வெடித்து வீடுகள் சேதமடைந்த வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்
காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து வீடுகள் சேதமடைந்த வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மதுரை,
தூத்துக்குடி புத்தன்தருவையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருவிழாக்களுக்கு பட்டாசு விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இவர் திருவிழாவுக்கு கொண்டு செல்வதற்காக தனது காரில் பட்டாசுகளை வைத்திருந்தார். வீட்டின் முன்பு நின்ற அந்த காரில் பட்டாசுகள் திடீரென வெடித்தன. இதில் அவரது வீட்டின் அருகில் உள்ள 37 வீடுகளும், கிறிஸ்தவ ஆலயத்துடன் சேர்ந்த பள்ளியும் சேதமடைந்தன.
இதையடுத்து தட்டார்மடம் போலீசார் வழக்குபதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.இவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், திருவிழாக்களுக்கு பட்டாசு விற்க உரிமம் பெற்றுள்ளேன். சேதமடைந்த வீடுகளையும், பள்ளியையும் புதுப்பித்துக்கொடுக்க தயாராக உள்ளேன். ஏற்கனவே 3 வீடுகளை ரூ.4 லட்சம் செலவில் புதுப்பித்து கொடுத்துள்ளேன். மீதமுள்ள வீடுகளையும் புதுப்பித்து கொடுக்க தயாராக உள்ளேன். எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், வெடி விபத்தில் மனுதாரரும் காயம் அடைந்துள்ளார். சேதமடைந்த வீடுகளை புதுப்பித்து தர சம்மதித்து உள்ளார். எனவே மனுதாரருக்கு வருகிற 27-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது.
மனுதாரர் மீதான வழக்கின் விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை வருகிற 28-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story