மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்; மொடக்குறிச்சி அருகே பரபரப்பு


மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்; மொடக்குறிச்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 10:17 PM GMT (Updated: 11 Oct 2021 10:17 PM GMT)

மொடக்குறிச்சி அருகே பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வினர்  சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் பஸ் நிலையம் பகுதியில் நேற்று இரவு 7 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ‘மக்கள் விசாரணை மன்றம் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்‘ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி பா.ஜ.க.வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் அங்கிருந்த கம்யூனிஸ்டு, தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வினர் எழுமாத்தூர் பஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
புகார் மனு
அப்போது பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் இருதரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு பா.ஜ.க.வினர், பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்கள்.
மேலும் இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் போலீசார், ‘விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்டு் பா.ஜ.க.வினர் சாலை மறியலை கைவிட்டனர்.
பின்னர் அவர்கள் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

Next Story