5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்; கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்; கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 3:56 AM IST (Updated: 12 Oct 2021 3:56 AM IST)
t-max-icont-min-icon

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்  கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணி நிரந்தரம்
தூய்மை பணி, குடிநீர் வினியோக பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே  தூய்மை பணியாளர்கள் நியமிக்கலாம் என்பது தொடர்பான அரசின் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 480 நாட்கள் பணி முடித்த தூய்மை பணியாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சட்டப்படியான ஊதியமாக மாநகராட்சியில் ரூ.693-ம், நகராட்சியில் ரூ.579-ம், பேரூராட்சியில் ரூ.501-ம் என்பதை ஏப்ரல் மாதம் முதல் வழங்க வேண்டும்.
வேலை நிறுத்த போராட்டம்
அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா கால சிறப்பு ஊதியம், சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, ஈரோடு மாநகராட்சியில் 700-க்கும் மேற்பட்டோர், பவானி, கோபி, சத்தி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் தலா 150 முதல் 200 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
மேலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி நகர்புற உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.), மற்றும் பல்வேறு தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தூய்மை பணியாளர்கள், ‘எங்களுடைய 5 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும்’ என்றனர்.
குப்பை சேகரிக்கும் பணி பாதிப்பு
அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், ‘உங்களுடைய கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அரசின் கவனத்துக்கு கலெக்டர் மூலம் எடுத்து செல்லப்பட்டு உங்களுடைய கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்’ என உறுதியளித்தார்.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தங்களது தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் தர்ணா போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் ஈரோடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி மற்றும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

Next Story