கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றம்
கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
ஏரி நீர்மட்டம் உயர்வு
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு மழைநீர் மற்றும் கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இந்த நிலையில், நீர்மட்டம் 34 அடியை எட்டியதால் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கையாக 3 மற்றும் 13-ம் எண் கொண்ட மதகுகள் வழியாக தலா 500 கனஅடி வீதம் 1000 கனஅடி உபரிநீர் நேற்று முன்தினம் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக 29 கிராமங்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் நேற்று காலை முதல் கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
2 ஆயிரம் கனஅடி நீர்
வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரித்து 2 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் மொத்தம் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34.05 அடி ஆக பதிவாகியது. 2.839 டி.எம்.சி. தண்ணீர் தற்போது இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,564 கனஅடி வீதம் மழை நீர் வந்து கொண்டிருந்தது.
பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஆகிய ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Related Tags :
Next Story