151 அபாயகரமான இடங்கள் கண்காணிப்பு


151 அபாயகரமான இடங்கள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 1:28 PM GMT (Updated: 12 Oct 2021 1:28 PM GMT)

151 அபாயகரமான இடங்கள் கண்காணிப்பு

ஊட்டி

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் 151 அபாயகரமான இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 213 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆங்காங்கே மரங்கள் விழுகின்றன. மண்சரிவு ஏற்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை குறைந்து இருந்தது. 

ஆனாலும், பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி- மஞ்சூர் சாலை மெர்லேண்ட் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

ஊட்டி-41, குந்தா-32, அவலாஞ்சி-20, எமரால்டு-11, கெத்தை-25, கிண்ணக்கொரை-31, அப்பர்பவானி-44, பாலகொலா-20, குன்னூர்-23, பர்லியார்-15, கேத்தி- 72, உலிக்கல்-22, 

கீழ் கோத்தகிரி-24, கூடலூர்-13, தேவாலா-94, செருமுள்ளி-29, பாடாந்தொரை-33, பந்தலூர்-60, சேரங்கோடு-28 உள்பட மொத்தம் 717 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 24.72 ஆகும். அதிகபட்சமாக தேவாலாவில் 9 சென்டி மீட்டர் மழை கொட்டியது.

அபாயகரமான இடங்கள்

தொடர் மழையால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 483.80 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். இந்த மழை குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகமாக இருக்கும். 

இதை கருத்தில் கொண்டு குன்னூரில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 70 பகுதிகள், கோத்தகிரியில் 81 பகுதிகள் என மொத்தம் 151 அபாயகரமான இடங்களை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நிவாரண முகாம்கள்

குன்னூர் வருவாய் கோட்டத்தில் முதல் நிலை பொறுப்பாளர்கள் 1,257 பேர் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கவும், மீட்பு பணிகளில் ஈடுபடவும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 

முன்னெச்சரிக்கையாக 213 நிவாரண மையங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பணியாளர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றனர்.

Next Story