வால்பாறையில் விடிய விடிய பலத்த மழை
வால்பாறையில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விடிய விடிய மழை
தமிழக-கேரள எல்லை பகுதிகளான சாலக்குடி, மளுக்கப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டும் பெய்து வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 11.30 மணிக்கு பெய்ய தொடங்கிய பலத்த மழை நேற்று அதிகாலை வரை விடிய விடிய பெய்தது.
இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கருமலை, நடுமலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் வால்பாறை பகுதிக்கு குடிநீர் வழங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிந்து வருகிறது.
மரம் விழுந்தது
இதற்கிடையில் பலத்த மழை காரணமாக கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து அக்காமலை எஸ்டேட்டிற்கு செல்லும் வழியில் பாலாஜி கோவில் பிரிவு அருகே மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சோலையாறு அணையின் நீர்மட்டம் குறைந்து இருந்த நிலையில், அதன்பிறகு பெய்த மழை காரணமாக நேற்று அதிகாலை மீண்டும் முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. தமிழக-கேரள எல்லையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் அதை ஒட்டி உள்ள ஆறுகளிலும், நீரோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சாலக்குடி பகுதியில் இருந்து மளுக்கப்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கேரள வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
பனிமூட்டம்
விடிய விடிய பெய்த மழை காரணமாக வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பகல் நேரத்திலேயே நகரில் பனிமூட்டம் நிலவியது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வால்பாறையில் 85 மி.மீ. மழையும், சோலையாறு அணையில் 86 மி.மீ. மழையும், மேல்நீரார் அணையில் 128 மி.மீ. மழையும், கீழ் நீரார் அணையில் 92 மி.மீ. மழையும் பெய்துள்ளது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 1,140 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. சோலையாறு மின் நிலையம்-1 இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்த பிறகு 396 கன அடி நீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story