இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயற்சி


இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயற்சி
x
தினத்தந்தி 12 Oct 2021 10:24 PM IST (Updated: 12 Oct 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வந்து இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

பொள்ளாச்சி

கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வந்து இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

லாரி சிறைபிடிப்பு

பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.நாகூர் பாறைக்குழி பகுதியில் ஒரு லாரி நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது லாரியில் இறந்த மாட்டின் உடல் இருப்பது தெரியவந்தது. உடனே லாரியை சிறைபிடித்து, ஊராட்சி மன்ற நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மேலும் கோமங்கலம் போலீசாரும் வந்து விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் லாரியில் 16 மாடுகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்றனர். அங்கு 15 மாடுகளை விற்பனை செய்த நிலையில் ஒரு எருமை மாடு மட்டும் இறந்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் இறந்த மாட்டின் உடலை கேரளாவில் புதைக்க அனுமதிக்காததால் லாரியில் தூக்கிப்போட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்தில் இறந்த மாட்டை வீசி செல்வதற்கு திட்டமிட்டு உள்ளனர்.

ரூ.20 ஆயிரம் அபராதம்

இறந்த எருமை மாட்டின் உடலை வீசுவதற்கு லாரியை நிறுத்தியபோது பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது தெரியவந்தது. லாரியை தேனியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்து உள்ளார். பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்த முயற்சி செய்தாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரி டிரைவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் போலீசார் லாரியின் டிரைவர் பெயர், லாரியின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை எழுதி கொண்டனர். மேலும் இறந்த மாட்டின் உடலை வேறு எங்காவது கொண்டு சென்று புதைக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதியில் வீசி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து லாரியுடன் எருமை மாட்டின் உடலை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் தொடர்ந்து இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story