நம்பியூர் அருகே கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவி முறையாக வாக்குகளை எண்ணவில்லை எனக்கூறி தி.மு.க.வினர் திடீர் தர்ணா
நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் முறையாக வாக்குகளை எண்ணவில்லை எனக் கூறி தி.மு.க.வினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் முறையாக வாக்குகளை எண்ணவில்லை எனக் கூறி தி.மு.க.வினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடக்கரை ஊராட்சி
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை ஊராட்சி தலைவர் குப்புசாமி என்பவர் கடந்த ஆண்டு இறந்தார். இதையடுத்து இந்த பதவிக்கும், 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மொத்தம் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஊராட்சியில் உள்ள மொத்த வாக்குகள் 2,666. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட சிவக்குமார் என்பவர் 1,308 வாக்குகள் பெற்று ெவற்றிபெற்றார். அதற்கு அடுத்தபடியாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர் கே.பி.சண்முகசுந்தரம் என்பவர் 1,284 வாக்குபெற்று தோல்வி அடைந்தார்.
இதேபோல் கூடக்கரை ஊராட்சி 6-வது வார்டுக்கான தேர்தலில் தங்கராசு என்பவர் 203 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
தர்ணா-தள்ளுமுள்ளு
இந்தநிலையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய கே.பி.சண்முகசுந்தரத்தின் ஆதரவாளர்களான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டார்கள். பின்னர் அதிகாரிகள் முறையாக வாக்குகளை எண்ணவில்லை என்று கூறி கோஷம் போட்டு தர்ணாவில் ஈடுபட்டார்கள். உடனே போலீசார் அவர்களை கலைந்து போக சொன்னார்கள். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளிடம், முறையாகத்தான் எண்ணிக்கை நடந்துள்ளது என்று சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னரே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றார்கள். இதனால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story