‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Oct 2021 9:21 PM GMT (Updated: 12 Oct 2021 9:21 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

தெருவிளக்கு ஒளிரவில்லை
பெருந்துறை சீனாபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது பழைய வீரணம்பாளையம். இங்குள்ள மின்கம்பத்தில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே உடனே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பழையவீரணம்பாளையம்.

கழிவுநீர் கால்வாய் வசதி 
மூங்கில்பாளையம் ஊராட்சியில் விஜயமங்கலத்தில் இருந்து வரும்  கழிவு நீர் விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் கழிவு நீர் அருகில் உள்ள விவசாய நிலத்துக்குள்ளும், கடைகளுக்குள்ளும் செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‌‍‌பெ.சவுந்தரராஜன், விஜயமங்கலம்.

கொசு தொல்லை
ஈரோடு மாநகராட்சி 37-வது வார்டுக்கு உள்பட்ட முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய 2-வது பகுதியில் செல்லும் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. கொசு கடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும், கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பானு, முத்தம்பாளையம்.

பூங்கா புதுப்பிக்கப்படுமா? 
பவானி பழைய பஸ்நிலையம் அருகே கடந்த ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் அதை முழுமையாக கட்டவில்லை. பூங்காவுக்குள் இருக்கும் சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையாக பொருத்தப்படவில்ைல. ஆனாலும் குழந்தைகள் அதில் சென்று விளையாடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை உடனே புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
அரவிந்த், பவானி. 

ஆபத்தான கிணறு
பவானி அருகே உள்ள புன்னம் ஊராட்சியில் சின்ன மேட்டூர் மாரியம்மன் கோவிலில் இருந்து அரசு தொடக்கப்பள்ளி செல்லும் வழியில் ரோட்டின் ஓரம் ஒரு கிணறு உள்ளது. சுமார் 50 அடி அழமுள்ள இந்த கிணற்றை சுற்றி பாதுகாப்பு சுவர் இல்லை. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கொஞ்சம் அசந்தாலும் கிணற்றுக்குள் விழுந்துவிடுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆபத்தான கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும்.
செந்தில், பவானி. 

அதிகாரிகள் தடுப்பார்களா?
ஈரோடு கணபதிநகரில் கீழ்பவானி வாய்க்கால் அருகே இருசக்கர வாகனங்களில் பிளாஸ்டிக் தொட்டிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். அப்பகுதி மக்கள் இதுகுறித்து கேட்டாலும், மீண்டும் வந்து கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அங்கு சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பாலம் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
சச்சிதானந்தம், ஈரோடு.

பாராட்டு
நம்பியூர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக ஒளிராமல் இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது வேறு மின்விளக்கு பொருத்தப்பட்டு ஒளிர்கிறது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நம்பியூர்.



Next Story