கடம்பூர் அருகே காட்டாற்றில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது- 5 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


கடம்பூர் அருகே காட்டாற்றில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது- 5 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 2:52 AM IST (Updated: 13 Oct 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அருகே காட்டாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் 5 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே காட்டாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் 5 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
மலை கிராமங்கள்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே அடர்ந்த மலைப்பகுதியையொட்டி உள்ளது மாக்கம்பாளையம் கிராமம். இக்கிராமத்திற்கு செல்லும் வழியில் அரிகியம், கோம்பையூர், கோவிலூர், கோம்பைதொட்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு செல்லும் வழியில் குரும்பூர் பள்ளம், மாமரத்து பள்ளம் என 2 காட்டாறுகள் ஓடுகிறது. மழை காலங்களில் இந்த ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும். அப்போதெல்லாம் காட்டாறுகளுக்கு மறுகரையில் உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. 
போக்குவரத்து துண்டிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வனப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளம், மாமரத்து பள்ளம் 2 காட்டாறுகளிலும் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 
இதன்காரணமாக கோம்பையூர், கோவிலூர், கோம்பைதொட்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
கரையில் நின்றனர்
மாக்கம்பாளையத்துக்கு செல்வதற்காக வந்த பஸ்கள் கரையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச்சென்றன. காட்டாறுகளின் இருகரைகளிலும் கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் நின்றனர்.
 ஒரு சிலர் ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்தனர். மோட்டார்சைக்கிளுடன் கடக்க முயன்ற ஒருவர் நடுவழியில் நின்று அபயக்குரல் எழுப்பினார். உடனே கரையில் இருந்த வாலிபர்கள் ஓடிச்சென்று மோட்டார்சைக்கிளுடன் அதில் சென்றவரை மீட்டார்கள். 
வேதனை
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வெள்ளம் குறைய தொடங்கியது. அதன்பின்னரே பொதுமக்கள் காட்டாற்றை கடந்து சென்றனர். நேற்று காலையில் இருந்து பஸ்போக்குவரத்தும் தொடங்கியது. 
2 காட்டாறுகளை கடக்கவும் மேம்பாலம் கட்டித்தரவேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது பாலம் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் பணி தொடங்கவில்லை என்று மலைகிராம மக்கள் வேதனை பட்டார்கள். 
1 More update

Next Story