சத்தியமங்கலம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி


சத்தியமங்கலம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 13 Oct 2021 2:52 AM IST (Updated: 13 Oct 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலியானார்கள்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலியானார்கள். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிவியார்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). இவருடைய மனைவி சாந்தி (45) இவர்களுடைய மகன் கவின் (24) பி.காம். பட்டதாரி. மகள் பிரீத்தி (20). கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். மகேந்திரன் 1½ ஏக்கரில் சம்பங்கி செடி சாகுபடி செய்துள்ளார். தந்தைக்கு உதவியாக கவின் தோட்ட வேலை செய்து வந்தார். 
மின்சாரம் தாக்கியது
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மகேந்திரன் தோட்டத்துக்கு பூ பறிக்க சென்றார். அப்போது கிணற்றில் உள்ள மோட்டாருக்கு இணைப்பு கொடுக்கும் மின்சார ஒயர் தரையில் கிடந்தது.
அது கிடப்பது தெரியாமல் மகேந்திரன் கால்களால் மிதித்து விட்டார். அப்போது ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி அதே இடத்தில் துடிதுடித்து மகேந்திரன் இறந்துவிட்டார். 
கதறல்
தந்தை தோட்டத்துக்கு சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டதே என்று அவரை அழைத்துவர கவின் தோட்டத்துக்கு சென்றார்.  
அப்போது தோட்டத்தில் மின்சாரம் தாக்கி மகேந்திரன் இறந்து கிடப்பது தெரிந்தது. உடனே ஆவேசத்தில் தந்தை மீது கிடந்த மின் ஒயரை கவின் அகற்ற முயன்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அவரும் அதே இடத்தில் அலறி துடித்து இறந்தார். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் சாந்தியும், பிரீத்தியும் தோட்டத்துக்கு பதறி அடித்து ஓடினார்கள். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்கள் கதறி துடித்தது காண்போரையும் கண்கலங்க செய்தது. சிறிது நேரத்தில் அப்பகுதி மக்களும் அங்கு கூடிவிட்டார்கள். 
விசாரணை
இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மின் இணைப்பை துண்டித்து, மகேந்திரன், கவின் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
தோட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story