குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
சுல்தான்பேட்டை
சுல்தான் பேட்டை போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வு
கோவை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிர ரோந்து, வாகன சோதனை போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சில போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கனிவாக நடந்துகொள்ளாமல் அதிகார தோரணையில் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை, சூலூர் போன்ற பகுதிகளில் குற்றச்சம்பவம் மற்றும் போலீசாரின் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆய்வு செய்து வருகிறார்.
சட்டப்படி நடவடிக்கை
அப்போது போலீசாருக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நாம் காவல் துறையில் சேர்ந்து உள்ளோம். பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
குற்றம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பாதிப்படையாமல் அவர்களை பாதுகாப்பது நமது முக்கிய கடமையாகும். அதேபோன்று புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொண்டு அவர்களது கோரிக்கை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிய நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
பொது மக்களிடம் நேர்மையாகவும், கனிவாகவும் நாம் நடந்து கொண்டால்தான் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும். எப்போதுமே பொது மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story