நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Oct 2021 4:19 PM GMT (Updated: 13 Oct 2021 4:19 PM GMT)

ஆயுதபூஜையை முன்னிட்டு நாகை கடைத்தெருவில் பொரி, அவல், கடலை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்:
ஆயுதபூஜையை முன்னிட்டு நாகை கடைத்தெருவில் பொரி, அவல், கடலை  வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
ஆயுத பூஜை
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த பூஜையின் போது பொரி, அவல், பொரிக்கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல், தேங்காய், பழம், ஆப்பிள், மாதுளம், கொய்யா உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தப்படும். அதேபோல் ஆட்டோ, கார் நிறுத்தங்கள் மற்றும் தொழில் புரியும் அனைத்து இடங்களிலும் செய்யும் தொழிலே தெய்வமாக கருதி பூஜைகள் நடைபெறும். 
பொதுமக்கள் குவிந்தனர்
ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று நாகை கடைத்தெருவில் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக நாகையை சுற்றியுள்ள செல்லூர், பாலையூர், அந்தணப்பேட்டை, பாப்பாகோவில், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நாகை கடைத்தெருவில் பொருட்கள் வாங்குவதற்காக வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
அதேபோல் நீலாவீதிகள், புதிய பஸ் நிலையம், ஆஸ்பத்திரி ரோடு, பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகை-நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பூஜைக்கான பொரி, பொரிக்கடலை, பழவகைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டன. மேலும் வாகனங்களில் கட்டுவதற்காக வாழைக்குலை, வாழை கட்டுகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 
பூக்களின் விலை உயர்வு 
மேலும் பூசணிக்காய், வாழை இலை மற்றும் பூஜை பொருட்களையும்  பொதுமக்கள் வாங்கினர். கடைகளில் பொரி பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்பனை செய்யப்பட்டன. ஆயுதபூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை விற்கப்பட்டது. இதேபோல சம்பங்கி, செவ்வந்தி, செண்டி உள்ளிட்ட பூக்களின் விலையும்  உயர்ந்து காணப்பட்டது. ஆயுதபூஜையை முன்னிட்டு நாகை கடைத்தெரு களை கட்டியுள்ளது. 
வேதாரண்யம் 
வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், மருதூர், நெய்விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  5 ஆயிரம் ஏக்கரில் முல்லை  மற்றும் செண்டி பூக்களின்  சாகுபடி செய்யப்பட்டுளளது. 
 ஆயுத பூஜையை முன்னிட்டு வேதாரண்யத்தில் முல்லை பூ கிலோ ரூ. 800-வரைக்கும்,  செண்டி பூ கிலோ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டதால் அப்பகுதி  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story