மயிலாடுதுறை கடைவீதியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


மயிலாடுதுறை கடைவீதியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 13 Oct 2021 10:27 PM IST (Updated: 13 Oct 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை கடை வீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மயிலாடுதுறை;
ஆயுத பூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை கடை வீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
ஆயுத பூஜை விழா 
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை வணங்கும் நாளாக இந்த ஆயுத பூஜை இருந்து வருகிறது. மேலும் மாணவர்களின் அறிவுத்தளத்தை மேம்படுத்தும் வகையில் தங்கள் புத்தகங்களை வைத்தும் வழிபடுவது வழக்கம். ஆயுத பூைஜ வழிபாட்டில் முக்கிய பொருட்களாக பொரி, சுண்டல், பழங்கள், இனிப்பு வகைகள், காய்கறிகள் என பலவகை உணவு பொருட்களை வைத்து மக்கள் வழிபடுகிறார்கள். 
அலைமோதிய மக்கள் கூட்டம்
மேலும் தொழில் நிறுவனங்களிலும், வாகனங்களிலும் தோரணங்கள், வாழைக்கன்றுகளை கட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை நகரில் நேற்று பொதுமக்கள் ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு, பெரியகடை தெரு, திரு.வி.க. மார்க்கெட் பகுதிகளில் உள்ள பூக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பொரி கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கடைத்தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
பூக்கள் விலை உயர்வு
 மயிலாடுதுறையில் நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மயிலாடுதுறையில் சராசரி நாட்களில் ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படும் செவ்வந்தி பூ நேற்று ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ முல்லை அரும்பு நேற்று ரூ.600-க்கும், ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் மல்லிகை பூ ரூ.500- க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் அரளிப்பூ ரூ.500-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் சம்பங்கி ரூ.250-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும் செண்டு பூ ரூ.100க்கும், ரூ.50- க்கு விற்பனை செய்யப்படும் கோழிக்கொண்டை பூ ரூ.80- க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.
வாழைக்கன்றுகள்
ஆங்காங்கே வாழைக்கன்றுகளும், தோரணங்களும் தெருக்களில் விற்பனை செய்யப்பட்டன.  பொதுமக்கள் தோரணங்களையும், வாழைக்கன்றுகளையும் வாங்கி சென்றனர். ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால்  மயிலாடுதுறை நகரம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

Next Story