தூய்மை கணக்கெடுப்பு ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது


தூய்மை கணக்கெடுப்பு ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 14 Oct 2021 1:13 AM IST (Updated: 14 Oct 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை கணக்கெடுப்பு ஊரக மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.

ஈரோடு
தூய்மை கணக்கெடுப்பு ஊரக மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூய்மை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் மூலம் ஊரகப்பகுதிகளின் சுகாதார நிலை குறித்து மேற்கொள்ளப்படும் 3 தரப்பு கணக்கெடுப்பாகும். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சிகளின் சுகாதார நிலை குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
கழிவுநீர் தேக்கம்
தற்போது 2021-ம் ஆண்டிற்கு திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை தக்கவைத்தல், பொது இடங்களில் கிராம புறங்களின் சுகாதார நிலைகள் குறித்தும், கிராம ஊராட்சிகளில் இருந்து கிடைக்கும் குப்பைகளை சேகரம் செய்யும் முறைகள், திடக்கழிவுகளை முறையாக தரம்பிரித்து மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை முறையாக தரம்பிரித்து பாதுகாப்பாக அகற்றுதல் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும் கிராம ஊராட்சிகளில் கழிவுநீர் தேக்கம் குறித்தும் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கழிவுநீர் மேலாண்மை முறைகளான தனிநபர் உறிஞ்சு குழிகள் அமைத்தல், சமுதாய உறிஞ்சு குழிகள் அமைத்தல் போன்ற முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கழிப்பறைகள்
இந்த கணக்கெடுப்பு தொடர்பாக கிராம ஊராட்சி அளவில் எஸ்.எஸ்.ஜி.-2021 கைபேசி செயலியில் பொதுமக்கள் சுகாதாரம் குறித்த தங்களின் கருத்துகளை அதிக அளவில் பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், எஸ்.எஸ்.ஜி.-2021 தொடர்பாக முக்கிய தகவல் அளிப்பவர்களான ஊராட்சித்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வி.பி.ஆர்.எஸ்., பி.எல்.எப். ஆகியோருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் முக்கிய பொது இடங்களான பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வழிபாட்டு தளங்கள், சந்தைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் தூய்மையாக பராமரிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைக்கென ஊராட்சிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட வேண்டும்.
தூய்மை கணக்கெடுப்பு
மேலும் உரக்குழிகள், குப்பைகள் தரம்பிரித்தல் கூடங்கள், மண்புழு உரக்கொட்டகைகள் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பயன்பாட்டு நிலையில் இருத்தல் வேண்டும். எஸ்.எஸ்.ஜி.-2021 தொடர்பாக இந்த முகமையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாதிரிபேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். எனவே மேற்காண் வழிமுறைகளை பின்பற்றி தூய்மைக் கணக்கெடுப்பு ஊரகம் -2021-ல் ஈரோடு மாவட்டத்தினை சிறந்த மாவட்டமாக மாற்றிட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
ஒட்டுவில்லைகள்
முன்னதாக தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2021-ஐ முன்னிட்டு, செயலியின் சேவையினை தொடங்கி வைத்து, மாவட்ட கலெக்டர் வளாகத்தில், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2021 விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லைகளை வாகனங்களில் ஒட்டினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் மதுபாலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகதீசன் (வளர்ச்சி), செல்வராஜ் (தேர்தல்), மணிவண்ணன் (சத்துணவு), ஊராட்சி உதவி இயக்குனர் உமாசங்கர், மாவட்ட ஊராட்சி செயலாளர் பொன்னம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story