இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது


இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது
x
தினத்தந்தி 13 Oct 2021 8:01 PM GMT (Updated: 13 Oct 2021 8:01 PM GMT)

இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.

ஈரோடு
இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.
ஒத்திகை பயிற்சி
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிக்கும் துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் நேற்று சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு நாளை முன்னிட்டு, இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி மற்றும் விழிப்புணர்வு குறித்து தீயணைப்புத்துறை பணியாளர்கள் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல்விளக்கம் செய்து காண்பித்தார்கள்.
மேலும் புயல், மழை, வெள்ளத்தினால் பாதிப்படைந்து அடித்து செல்பவர்களை படகு மூலம் மீட்பது குறித்தும், அடுக்குமாடி வீடுகளில் தீ விபத்து ஏற்படும் போது தீயினை எவ்வாறு உடனுக்குடன் அணைக்க வேண்டும் என்பது குறித்தும், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடுக்குமாடிகளில் இருந்து காப்பாற்றுவது குறித்தும் செயல்விளக்கத்தினை ஈரோடு மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை பணியாளர்கள் செய்து காண்பித்தனர்.
மூச்சுக்கருவி
வெள்ள அபாய காலங்களில் உபயோகிக்க கூடிய உபகரணங்களை கொண்டு எவ்வாறு பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பதை பற்றியும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீ விபத்து காலத்தில் புகை வெளியேற்றும் கருவி புகை சூழ்ந்த பகுதியில் மூச்சுக்கருவி மற்றும் தீயணைப்பு கருவிகள் கொண்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மின்னல் தாக்கும் போது பச்சை மரங்கள் மின்சாரத்தை எளிதில் கடக்கும். எனவே, மழைக்காலத்தில் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். இடி தாக்கும் போது காதுகளை கைகளால் பொத்திக்கொள்ள வேண்டும். பாழடைந்த கட்டிடங்களின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும், பொதுமக்கள் இந்த பேரிடர் காலத்தில் தங்களையும் தங்களது உடைமைகளையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
வழிகாட்டி கையேடு
இதைத்தொடர்ந்து அவர், வெள்ளம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் தயார் நிலை வழிகாட்டி கையேட்டினை, பணியாளர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்), ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை துறை) அஸ்ரப்நிஷா மற்றும் தீயணைப்பு துறை பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Next Story