ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது


ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2021 9:24 PM GMT (Updated: 14 Oct 2021 9:24 PM GMT)

ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயதங்களுடன் கஞ்சா கடத்தி வந்த பழைய கொலை குற்றவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது துணியால் மறைக்கப்பட்ட நீளமான பொருட்களுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆந்திராவில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.

போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் துணியில் மறைத்து வைத்து கொண்டு வந்தது, ஆந்திராவில் இருந்து நாட்டு துப்பாக்கி, என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்த பட்டா கத்தி மற்றும் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலம் ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.

3 பேர் கைது

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாட்டு துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களையும், கஞ்சாவையும் கடத்தி வந்ததாக பழைய கொலை குற்றவாளிகளான புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த நடராஜ் (வயது 30), திருச்சி உறையூரை சேர்ந்த சரண்ராஜ் (21), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அருண்குமார் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பழைய குற்றவாளிகள் வலம் வந்தது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story