வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் கூழாங்கல் ஆற்றில் குளிக்க போலீசார் தடை விதித்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
வால்பாறை
தொடர் விடுமுறையால் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் கூழாங்கல் ஆற்றில் குளிக்க போலீசார் தடை விதித்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
வருகை அதிகரிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தடை
இதற்கிடையில் வால்பாறையில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றுக்கு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். அவர்களை ஆபத்தான இடங்களில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். ஆனாலும் அதை மீறி ஆபத்தான இடங்களில் சுற்றுலா பயணிகள் குளித்தனர். இதனால் கூழாங்கல் ஆற்றில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டர்கள் மூலம் உணவு சமைத்து சாப்பிட்டனர். இதேபோன்று நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஆனைமுடி ஹைபாரஸ்ட் எஸ்டேட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வால்பாறை பகுதியில் உள்ள எந்த ஒரு சுற்றுலா தலத்திலும்,வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையிலும் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.
இதனால் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story