குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி


குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Oct 2021 7:59 PM IST (Updated: 15 Oct 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொள்ளாச்சி

கோவில்களில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தரிசனத்துக்கு அனுமதி

கொரோனா பரவல் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதை தொடர்ந்து நேற்று முதல் அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

வித்யாரம்பம் நிகழ்ச்சி

இதேபோன்று பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று மகாளியம்மன் கோவில், அய்யப்பன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், செஞ்சேரி மலை மந்திரிகிரி வேலாயுதசாமி கோவிலில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மன் கோவிலில் எழுத்தறிவித்தல் என்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தையின் கையை பிடித்து அரிசியில் எழுத சொல்லி கொடுக்கப்பட்டது.

வால்பாறை

இதேபோன்று வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் நவராத்திரி கொலு கடைசி நாள் என்பதால், கோவில்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்ட கொலுவுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கிடையில் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொலுவுக்கு முன்னால் குழந்தைகளை அமர வைத்து, அவர்களின் கையால் அரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து, கல்வி சிறக்க வழிபாடு நடத்தினர்.

மேலும் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சூலக்கல் மாரியம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதில் கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story