5 கொள்ளையர்கள் கைது; 120 பவுன் நகை மீட்பு


5 கொள்ளையர்கள் கைது; 120 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 16 Oct 2021 1:50 AM IST (Updated: 16 Oct 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்த கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 120 பவுன் தங்க நகைகள், 4 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை,

மதுரையில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்த கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 120 பவுன் தங்க நகைகள், 4 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்களிடம் தொடர் நகை பறிப்பு

மதுரை நகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ்.எஸ்.காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் தனியாக செல்லும் பெண்களை குறித்து வைத்து நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கணேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

5 பேர் கைது

அவர்கள் குற்றங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி தல்லாகுளம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று நகையை பறித்த கிருஷ்ணபுரம் காலனியை சேர்ந்த வைரமணி (வயது 21) அவரது கூட்டாளியான ஜெய்ஹிந்த்புரம் பாலசுப்பிரமணியன் (34) ஆகியோரை தல்லாகுளம் சரக தனிப்படை போலீசாரும், கல்மேடு பகுதியை சேர்ந்த பழனிக்குமார் (25), சிவா (19), மதன் (25) ஆகியோரை கீரைத்துறை சரக தனிப்படை போலீசாரும் கைது செய்தனர். இவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.

120 பவுன் நகை மீட்பு

இது குறித்து குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகரன் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட வைரமணி மதுரை கமிஷனர் அலுவலகம் அருகே நடந்த வழிப்பறி உள்ளிட்ட நகரில் 13 சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர். இவர் மீது சமயநல்லூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்கு உள்ளது. இவர் பறித்த நகைகளை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து விற்பனை செய்துள்ளார். இவர்களிடமிருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள 90 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்மேடு பகுதியை சேர்ந்த பழனிகுமார், சிவா, விஜய் ஆகியோர் 8 சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story