பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலை ஆகிறார்


பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலை ஆகிறார்
x
தினத்தந்தி 15 Oct 2021 8:31 PM GMT (Updated: 15 Oct 2021 8:31 PM GMT)

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சுதாகரன், இன்று (சனிக்கிழமை) விடுதலை ஆகிறார். அபராத ெதாகையை செலுத்தாததால் கூடுதலாக அவர் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவித்தார்.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கு

  சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா பரபரப்பு தீர்ப்பு கூறினார். அத்துடன் ஜெயலலிதா தவிர மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

  பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பிலும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, வழக்கை விசாரித்து 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு உறுதி

  கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து கா்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

  இதையடுத்து அவரது பெயர் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து நீக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு சசிகலா உள்பட 3 பேருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதத்தொகையை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

சசிகலா, இளவரசி விடுதலை

  இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரண் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் அன்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் திட்டமிட்டப்படி கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

  அந்த நேரத்தில் அவர்கள் 2 பேரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். விடுதலை நாள் அப்போது வந்ததை அடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

சுதாகரன் இன்று விடுதலை

  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்தும், சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவுப்படி அவர் அபராதத் தொகையை செலுத்த தவறியதால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார்.

  இந்த நிலையில் அவரது தண்டனை காலம் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. இதையொட்டி அவர் இன்று காலையில் விடுதலை செய்யப்படுகிறார். அவர் ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழிக்கப்பட்டதை அடுத்து அவர் சற்று முன்கூட்டியே விடுதலை ஆகிறார். அவரை வரவேற்று அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் பெங்களூரு வந்துள்ளனர்.

வளர்ப்பு மகன்

  சுதாகரன், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story