ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்- வீடு வீடாக சென்று ஆர்.டி.ஓ. சோதனை
ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது. ஈரோடு ஆர்.டி.ஓ. வீடு வீடாக சென்று சோதனை பணிகளில் ஈடுபட்டார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது. ஈரோடு ஆர்.டி.ஓ. வீடு வீடாக சென்று சோதனை பணிகளில் ஈடுபட்டார்.
டெங்கு காய்ச்சல்
ஈரோடு மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து உள்ளது. இதனால் ஏடிஸ் கொசுக்கள் பெருக்கம் அடைந்து டெங்கு காய்ச்சலை உருவாக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், சளி பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு பொதுமக்களை பீதியில் வைத்திருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சல் பரவல் இன்னும் பாதித்து விடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடுப்பு பணிகள்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் தீவிர டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆர்.டி.ஓ. சோதனை
இந்தநிலையில் ஈரோடு மாநகர் மற்றும் வருவாய் கோட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று, அங்கு மழை நீர் தேங்கி உள்ளதா, குடிநீர் தொட்டிகளில் மருந்து அடிக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை செய்தார்.
அதுபோல் நேற்று ஈரோடு மாநகராட்சி 8-வது வார்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டார். தரை மட்ட குடிநீர் தொட்டிகளை திறந்து கொசுப்புழுக்கள் உள்ளனவா, வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதா, டயர்கள், தேங்காய் தொட்டிகள், உரல்கள், பழைய பாத்திரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்பதை சோதனை செய்தார். மேலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கையில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சோதனையின் போது மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story