கடம்பூர் அருகே பலத்த மழை; காட்டாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்- தண்ணீர் குறையும் வரை நின்றிருந்த அரசு பஸ்


கடம்பூர் அருகே பலத்த மழை; காட்டாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்- தண்ணீர் குறையும் வரை நின்றிருந்த அரசு பஸ்
x
தினத்தந்தி 16 Oct 2021 3:44 AM IST (Updated: 16 Oct 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தண்ணீர் குறையும் வரை நின்றிருந்து அரசு பஸ் சென்றது.

டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தண்ணீர் குறையும் வரை நின்றிருந்து அரசு பஸ் சென்றது.
2 காாட்டாறுகள்
கடம்பூர் அருகே மலைப்பகுதியில் உள்ள கிராமம் மாக்கம்பாளையம். இந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் அரிகியம், கோம்பையூர், கோவிலூர், கோம்பைதொட்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி இந்த கிராமங்களுக்கு செல்லும் வழியில் குரும்பூர் பள்ளம், மாமரத்து பள்ளம் ஆகிய பகுதிகளில் 2 காட்டாறுகள் குறுக்கே ஓடுகிறது. 
மழைக்காலங்களில் மழைநீர் இந்த காட்டாறுகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும். அப்போது இந்த மலைக்கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்படுவது வழக்கம்.
வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூர் வனப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து அங்குள்ள காட்டாறுகளில் ஓடியது. 
இதன்காரணமாக 5-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் காட்டாற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும் மாக்கம்பாளையம் செல்வதற்காக வந்த அரசு பஸ்சும் அங்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றது. பின்னர் மழைநீர் வடியும் வரை காத்திருந்து இரவு நேரத்தில் காட்டாற்றை கடந்து சென்றனர். 
பலத்த மழை 
இந்த நிலையில் நேற்று மதியம் கடம்பூர் வனப்பகுதியில் திடீரென மழை பெய்தது.  இதன்காரணமாக அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் மீண்டும் கரைபுரண்டு ஓடியது. அப்போது மாக்கம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. காட்டாற்றில் வெள்ளம் வடிந்த பின்னர் 1 மணி நேரம் காத்திருந்து அரசு பஸ் சென்றது. இதனால் பயணிகள் தங்களுடைய கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 
இந்த காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 

Next Story