பவானிசாகர் அணையின் பூங்கா சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்திய யானை- பயத்தில் ஓடிய கர்ப்பிணி கீழே விழுந்து படுகாயம்


பவானிசாகர் அணையின் பூங்கா சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்திய யானை- பயத்தில் ஓடிய கர்ப்பிணி கீழே விழுந்து படுகாயம்
x
தினத்தந்தி 16 Oct 2021 3:44 AM IST (Updated: 16 Oct 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் பூங்கா சுற்றுச் சுவரை யானை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது பயத்தில் அங்கிருந்து ஓடிய கர்ப்பிணி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் பூங்கா சுற்றுச் சுவரை யானை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது பயத்தில் அங்கிருந்து ஓடிய கர்ப்பிணி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 
பவானிசாகர் பூங்கா
பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் காட்டு யானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை  வந்த ஒற்றை யானை பூங்காவிற்குள் முகாமிட்டது.
சுற்றுச்சுவரை இடித்தது
சிறிது நேரம் பூங்காவுக்குள் நடமாடிய யானை அங்கிருந்து வெளியேற முயன்றது. அப்போது பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. இரும்பு கதவையும் பெயர்த்து தள்ளியது. பின்னர் தார்சாலைக்கு வந்தது.
அப்போது புங்கார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி (வயது 26) என்ற கர்ப்பிணியும், அவருடைய கணவரும் நடைபயிற்சி சென்றிருந்தார்கள். எதிரே யானை வருவதை கண்டு ஆனந்தி பயத்தில் அங்கிருந்து கணவருடன் ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஆனால் யானை ஆனந்தியை நோக்கி வராமல் நல்லவேளையாக பக்கவாட்டில் இருந்த முட்புதருக்குள் சென்று மறைந்துகொண்டது.
உடனே ஆனந்தியை அவருடைய கணவர் சத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். 
விரட்டியடிப்பு
இதற்கிடையே யானை முட்புதருக்குள் இருக்கும் தகவல் கிடைத்து பவானிசாகர் வனத்துறையினர் அங்கு வந்தார்கள். நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை யானை வெளியே வரவில்லை. அதன்பின்னர் மெதுவாக வெளியே வர முயன்றது. உடனே வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதை பவானிசாகர் வாய்க்கால் பகுதிக்கு விரட்டினார்கள். இதையடுத்து யானை வாய்க்காலில் இறங்கி அதை கடந்து மறுகரையில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. 

Next Story