மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சென்னிமலை- கொடுமுடி
சென்னிமலை பகுதியில் நேற்று காலை முதலே வெயில் வாட்டி வந்தது. பின்னர் 2 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து 2.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 45 நிமிட நேரம் நீடித்த இந்த மழையால் ரோடுகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இதேபோல் கொடுமுடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சிவகிரி
கடந்த சில நாட்களாக சிவகிரி பகுதியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்தது. ஆனால் இரவு நேரங்களில் இடி, மின்னல் ஏற்பட்டாலும் மழை பெய்யவில்லை. வழக்கம்போல் நேற்றும் பகலில் வெயில் வாட்டியது.
இந்த நிலையில் சிவகிரி, விளக்கேத்தி, அஞ்சூர், கந்தசாமிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 3 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 5 மணி வரை நீடித்தது.
தாளவாடி
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தாளவாடி, திகனாரை, தலமலை, தொட்டகாஜனூர், பாரதிபுரம், அருள்வாடி, குளியாடா, ஆசனூர் பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த 3.30 மணி வரை நீடித்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.
மேலும் இந்த மழை காரணமாக தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் வழியில் உள்ள சுப்பிரமணி என்பவர் வீட்டின் அருகில் இருந்த மரத்தின் ஒரு பகுதி முறிந்து அவருடைய வீட்டின் மீது விழுந்தது. இதில் அவருடைய வீடு சேதம் அடைந்தது. நல்ல வேளையாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அந்தியூர்
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஈரெட்டி, மின்தாங்கி மற்றும் வழுக்குப்பாறை பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 6 மணி வரை நீடித்தது.
இதன்காரணமாக ஈரெட்டியில் உள்ள காட்டாற்று தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்றது. இதனால் மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வெள்ளம் வடியும் வரை காத்திருந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு சென்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் எண்ணமங்கலம் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்தன. மேலும் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைகரை, கொங்காடை, தாளக்கரை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழைநீரானது வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியான வரட்டுப்பள்ளம், கள்ளுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம் வழியாக வரட்டுப்பள்ளம் அணையை சென்றடைந்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நீரோடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story