தொழிலாளி கொலை வழக்கில் தந்தை, தாய் உள்பட 3 பேர் கைது


தொழிலாளி கொலை வழக்கில் தந்தை, தாய் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 8:31 PM GMT (Updated: 16 Oct 2021 8:31 PM GMT)

தாண்டிக்குடி அருகே பிணமாக கிடந்த தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தந்தை, தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் : 

தொழிலாளி கொலை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் தாண்டிக்குடி அருகே உள்ள வாழகிரி என்னுமிடத்தில் கடந்த 10-ந்தேதி சுமார் 15 அடி பள்ளத்தில் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். 
தாண்டிக்குடி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யபுரம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த திவ்யநாதன் மகன் கூலித்தொழிலாளியான செல்லத்துரை (வயது 37) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. 

தந்தை உள்பட 3 பேர் கைது
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்படி, 2 தனிப்படைகள் அமைத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். விசாரணையில், கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள காமக்காப்பட்டி சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 
சம்பவம் நடந்த நாளில், கொடைக்கானல் மலைப்பாதையில் சந்தேகப்படும்படி கார் ஒன்று வந்து சென்றது தெரியவந்தது. அந்த காரில் செல்லத்துரையின் தம்பி  ஜெகன் (32) வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஜெகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் அவர், தந்தை திவ்யநாதன் (66), தாய் ராஜம்மாள் (62) ஆகியோருடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர். 

அடித்து கொலை 
இதுதொடர்பாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதில் செல்லத்துரைக்கு திருமணம் ஆகவில்லை. அவர் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததுடன், பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார். இதனால் அவரை தீர்த்து கட்ட தம்பி ஜெகன் முடிவு செய்தார். கடந்த 6-ந்தேதி இரவு அவருடைய தம்பி ெஜகன், செல்லத்துரைக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். போதையில் மயங்கிய நிலையில் இருந்த அவரை, ஜெகன், தந்தை திவ்யநாதன், தாய் ராஜம்மாள் ஆகியோர் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதைக்கு ஒரு காரில் அழைத்து வந்து உள்ளனர். பின்னர் இரும்பு கம்பியால் செல்லத்துரையை அடித்து கொலை செய்து, கைகளை கட்டி உடலை தாண்டிக்குடி அருகே வீசி சென்று உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story