சிறுமியை கடித்து குதறிய நாய்


சிறுமியை கடித்து குதறிய நாய்
x
தினத்தந்தி 16 Oct 2021 8:32 PM GMT (Updated: 16 Oct 2021 8:32 PM GMT)

சிறுமியை நாய் கடித்து குதறியது.

மலைக்கோட்டை:

கடித்து குதறியது
திருச்சி மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் திருச்சி மாநகராட்சியால் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டும் எந்தவித பயனும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் திருச்சி பெரியசவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மூன்றரை வயது மகள் சிவன்யா. இவள் நேற்று அப்பகுதியில் விளையாடியபோது, தெருவில் சுற்றிய நாய் சிவன்யாவை விரட்டி கடித்து குதறியது. இதில் சிவன்யாவுக்கு முகம் முழுவதும் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக உறவினர்கள் நாயை விரட்டி, சிவன்யாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கருத்தடை செய்ய ஏற்பாடு
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் வாகனத்துடன் அங்கு சென்று, சிறுமியை கடித்த நாயை பிடித்து சென்றனர். இனியும் இதுபோன்று வேறு யாரையும் நாய்கள் கடித்து, குதறாத வகையில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் கூறுகையில், சிறுமியை தெருநாய் கடித்ததாக புகார் வந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அந்த தெருநாயை பிடித்துள்ளனர். மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும் உறையூர் கோணக்கரை பகுதியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அருகில் மேலும் ஒரு புதிய கருத்தடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்து வரும் நாட்களில் தெருவில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இனி நாய் தொல்லை படிப்படியாக குறைந்துவிடும் என்றார்.

Related Tags :
Next Story