புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்


புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 16 Oct 2021 8:35 PM GMT (Updated: 16 Oct 2021 8:35 PM GMT)

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

ஈரோடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். 
கடைசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வீடுகளிலும் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாள் படத்தை வைத்து வழிபட்டு, துளசி தீர்த்தத்தை குடித்து விரதத்தை முடிப்பார்கள். 
இந்த நிலையில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் துளசி மாலையுடன் கோவிலுக்கு சென்று, சாமிக்கு வழங்கி வழிபட்டார்கள். இந்த மாதத்தில் கடந்த 4 சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 5-வது சனிக்கிழமையான நேற்று அனுமதி கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் கோவிலுக்குள் சென்று கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தார்கள். 
கோபி
கோபி அருகே உள்ள பாரியூர் ஸ்ரீதேவி பூதேவிஆதிநாராயண பெருமாள் கோவிலில் காலை 7 மணிக்கு  பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆதி நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தந்தார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. 
இதேபோல் கோபி வரதராஜ பெருமாள், மூலவாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜ பெருமாள், மொடச்சூர் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை அழகுராஜா பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் வாசனை திரவியங்களால் சாமிக்கு அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தீபாராதனை காட்டப்பட்டது. 
அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை சீனிவாச பெருமாள், பருவாச்சி மலைக்கோவிலில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
செம்புளிச்சாம்பாளையம், காட்டுப்பாளையம், பள்ளிபாளையம், பருவாச்சி அம்மன்பாளையம், ஒலகடம், சின்னபருவாச்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மலையில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தார்கள். 
ஊஞ்சலூர்
 ஊஞ்சலூரில் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னிதியில் நேற்று சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் பெருமாள், ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. 
 இச்சிப்பாளையம்  கோனப்பெருமாள், கிழக்காலூர் பெருமாள், வடக்கு புதுப்பாளையம்  லட்சுமி நரசிம்மர், பால ஆஞ்சநேயர், கொளாநல்லி பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள், கொந்தளம் வரதராஜ பெருமாள் கோவில், பனப்பாளையம் ராமர் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். 
புஞ்சைபுளியம்பட்டி
புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று காலை புஞ்சைபுளியம்பட்டி டானா புதூரில் உள்ள கரிவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கரிவரதராஜ பெருமாளை தரிசனம் செய்தார்கள்.  இதேபோல் கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 
சென்னிமலை
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அலமேலுமங்கை, நாச்சியார் அம்மை சமேத ஆதி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உப்பிலிபாளையம்
அதேபோல் சென்னிமலையில் காங்கேயம் ரோட்டில் உள்ள ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோவிலிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை அருகே உப்பிலிபாளையத்தில் உள்ள அணிரங்க பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 ஈங்கூரில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி-பூமாதேவியுடன் கரிவரதராஜ பெருமாள் துளசி அலங்காரத்தில் காட்சியளித்தார்.  இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Next Story