பெங்களூருவில் போலீஸ் குடியிருப்பில் திடீர் விரிசல் - 32 குடும்பத்தினரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு


பெங்களூருவில் போலீஸ் குடியிருப்பில் திடீர் விரிசல் - 32 குடும்பத்தினரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு
x
தினத்தந்தி 17 Oct 2021 2:31 AM IST (Updated: 17 Oct 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ் குடியிருப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 32 குடும்பத்தினரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு:

அடுக்குமாடி குடியிருப்பு

  பெங்களூரு பின்னிமில் அருகே போலீஸ்காரர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு தரைதளத்துடன் 7 மாடிகளை கொண்டது ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் திறக்கப்பட்டு இருந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான போலீஸ்காரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘பி மற்றும் சி’ பிளாக்குகளை இணைக்கும் சுவரில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. அதாவது சுமார் 1½ அடிக்கு மேல் சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

32 குடும்பத்தினரை வெளியேற்ற...

  இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘இந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமான முறையில் தான் கட்டப்பட்டது. ஆனால் எப்படி விரிசல் ஏற்பட்டது என்று தெரியவில்லை’’ என்று கூறினர். மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்ட ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

  சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது குறித்து அங்கு வசிக்கும் குடும்பத்தினர் கூறும்போது, இந்த அடுக்குமாடி குடியிருப்பை தரமான முறையில் கட்டவில்லை என்றும், அவசர கதியில் கட்டி உள்ளதாகவும் கூறினர். மேலும் தாங்கள் தற்போது இங்கு தான் வசித்து வருவதாகவும், தங்களுக்கு வேறு வீடு தந்தால் அங்கு செல்ல தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 32 போலீஸ்காரர்கள் குடும்பத்தினரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். 32 குடும்பத்திலும் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சுற்றுச்சுவர் இடிந்தது

  இந்த நிலையில் பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவன சுற்றுச்சுவரில் 3 முதல் 4 இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் மழை பெய்தது. இதனால் மழைநீர் அந்த நிறுவனத்தில் தரைதளத்தில் புகுந்தது. பின்னர் அந்த தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றினர்.

  இதுபற்றி அறிந்ததும் கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ. விப்ரோ நிறுவனத்திற்கு சென்று இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதுபோல பெங்களூரு தாசரஹள்ளி அருகே மல்லசந்திராவில் உள்ள கெம்பேகவுடா பூங்காவின் 25 அடி உயர சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.

Next Story